b

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday, 26 September 2012

நாம் தொலைத்த விளையாட்டுக்கள்

நாம் தொலைத்த விளையாட்டுக்கள்





இப்போதுள்ள சிறுவர்களுக்கு விளையாடக்கிடைக்கும் X-BOX, Playstation, GameBoy இவற்றையெல்லாம் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நவீன விளையாட்டு சாதனங்களை இந்தத் தலைமுறை சிறுவர்கள் கையாளும் லாவகம் பிரமிக்க வைக்கிறது. அதே போல் நமது சிறுவயதில் நமக்கு நமது சிறு வயதில் என்ன விளையாடக்கிடைத்தது என்றும் ஆதங்கப்படவும் வைக்கிறது.

ஒளிந்து பிடித்து விளையாடுதல் :-
'சாட் பூட் த்ரீ' என்று சொல்லி ஓவ்வொருவராக விலக்கிவிட்டு கடைசியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் ஒன்றிலிருந்து பத்துவரை கண்ணை மூடிக்கொண்டு எண்ணவேண்டும். அதற்குள் மற்றவர்கள் ஒளிந்து கொள்ளவேண்டும். பின்பு ஒளிந்து கொண்டவர்களை ஒவ்வொருவராக கண்டு பிடிக்க வேண்டும். ஒளிந்திருப்பவரை ஒவ்வொருவராக கண்டு பிடித்தவுடன் 'ஒன்னீஸ்' 'ரெண்டீஸ்' :-) என்று சொல்லுவார்கள். இந்த விளையாட்டின் பெயரே ஒன்னீஸ் ரெண்டீஸ் என்று சொல்லுவது உண்டு. அனைவரும் கண்டு பிடிக்கப்பட்ட பின் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர் பின்பு தொடர வேண்டும். இப்படி போய்கொண்டே இருக்கும்.

பம்பர விளையாட்டு :-
பம்பர விளையாட்டு மிகவும் பிரசித்தமானது, 1,2,3 சொல்லிவிட்டு எல்லோரும் ஒரே சமயத்தில் பம்பரத்தை சுழலவிட்டுவிட்டு சாட்டையால் சுற்றி கையில் எடுக்க வேண்டும். யார் கடைசில் எடுக்கிறார்களோ அவர்களது பம்பரத்தை மண் தரையில் ஒரு வட்டம் போட்டுவிட்டு அதன் உள்ளே இடுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராக பம்பரத்தை வேகமாக சுழற்றி முதலில் அந்த வட்டத்துக்குள் குத்துமாறு சுழலவிடவேண்டும். வட்டத்துக்குள் குத்தாவிட்டால் அவரது பம்பரமும் வட்டத்துக்குள் வைக்கப்படும். இது ஒரு சுவாரசியமான ஆட்டம். ஆட்டத்தின் முடிவில் தோற்பவரின் பம்பரத்தின் மேல் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு 'ஆக்கர்'(பம்பரத்தின் மேல் ஆணியை வைத்து புள்ளி விழுமாறு ஓங்கி அடிப்பார்கள்) வைப்பார்கள். சில சமயங்களில் பம்பரம் உடைவது கூட உண்டு. சிலசமயம் பெண்களை கவர, பம்பரத்தை சுழற்றி தரையில் படாமலே கையில் எடுப்பதுவும் உண்டு.


கோலி விளையாட்டு :-
சுவற்றின் ஓரத்தில் ஒரு சதுரமாக ஒரு கோடு போட்டுவிட்டு அதற்குள் சில கோலிகளை உருட்டுவார்கள். அதற்குப்பிறகு எதிராளி சொல்லும் கோலியை எறிந்து அடிக்க வேண்டும். இதற்கு சிகரெட் அட்டை, கோலி குண்டு இவற்றை பணயமாக வைத்து ஆடுவது உண்டு. கோலிகுண்டு சிலசமயம் சிலர் பணம் வைத்து ஆடுவதால், வீட்டார்கள் அதை பெரும்பாலும் விளையாட அனுமதிப்பதில்லை.


கிட்டிப்புல்(கில்லி) :-
மிகவும் பிரபலமான ஆட்டம். ஆனால் பல இடங்களில் இதை விளையாடவிட மாட்டார்கள். எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு கில்லி விளையாட்டால் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டம் மிகவும் சுவாரசியமானது. தரையில் நீளவாக்கில் தோண்டிவிட்டு கிட்டிப்புல்லை அதற்கு குறுக்கில் வைக்க வேண்டும், பிறகு கையில் இருக்கும் கோலால் , கிட்டிப்புல்லை வேகமாக அழுத்தம் கொடுத்து நெம்பித் தள்ள வேண்டும். எதிராளிகள் அந்தப்புறம் நின்று கொண்டு இருப்பார்கள். அவர்கள் இதை கீழே விழாமல் பிடித்துவிட்டால் நீங்கள் அவுட்.. பின்பு அவர்கள் முறை. பிடிக்காமல் தூரத்தில் போய் விழுந்தால், நீங்கள் கோலை குறுக்காக வைக்கவேண்டும் .பின்பு அவர்கள் கிட்டிபுல்லை தூக்கி குறி பார்த்து எறிந்து அது கோலில் பட்டால் நீங்கள் அவுட். அவர்கள் எறியும் போது அது கோலில் படாமல் தூரத்தில் போய் விழுந்தால் நீங்கள் ஆட்டத்தை தொடரலாம். ஆட்டம் எப்படியென்றால், நீங்கள் கிட்டிப்புல்லின் சீவியிருக்கும் ஒரு முனையில் அடிக்க வேண்டும், அது எம்பி வரும்போது அதை கோலால் எத்தனை முறை தட்ட முடியுமோ அவ்வளவு புள்ளிகள். அப்படி தட்டிக்கொண்டே குழியிலிருந்து எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். ஒரு முறை கூட தட்ட முடியாவிட்டால் அங்கிருந்து குழி இருக்கும் தூரத்தை கையிலிருக்கும் கோலால் அளக்க வேண்டும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு புள்ளிகள். இப்படியே நீங்கள் அவுட் ஆகும் வரை ஆட்டம் தொடரும். ஒரு தெருவில் ஆடும் ஆட்டம் அப்படியே பக்கத்து தெருவிற்கும் போவது உண்டு.


பே பே :-
பள்ளியில் இடைவேளைகளில், சோளத்தட்டையால் எறி பந்து விளையாடுவது உண்டு.


செதுக்கல் :-
புளியங்கொட்டையை ஒரு வட்டத்திற்குள் கொட்டிவிட்டு அதை தட்டையான கல்லால் செதுக்கி வெளியே கொண்டு வந்து விளையாடும் 'செதுக்கு சில்' ரொம்ப பிரபலம்.


பட்டம் விடுதல் :-
ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு சென்று மாஞ்சா தடவி பட்டம் விடுதல் ரொம்ப பிரபலம். பட்டம் விடுவது ஒரு பெரிய கலையாகும். இதில் முக்கியமான ஒன்று சூச்சம் போடுதல் ( இதில் 2 வகை உண்டு மேல் முடிச்சு கீழ் முடிச்சு) இன்னும் நிறைய எழுதலாம் தொடர நினைப்பவர்கள் பின்னுட்டம் இடவும்.


பெண்கள் விளையாட்டு :-
பெண்களெல்லாம் கண்கட்டு விளையாட்டு, பரமபதம், நொண்டி , சொட்டாங்கல்( இது மிகவும் பிரபலமான விளையாட்டு), பல்லாங்குழி இவையெல்லாம் விளையாடுவது உண்டு.


கிச்சு கிச்சு தாம்பளம் :-
நல்ல மணல் விளையாடக்கிடைத்தால் மணலை நீளவாக்கில் குவித்துவிட்டு எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு சிறு கல்லை அதற்குள் ஒளித்து வைத்து எதிரில் இருப்பவர் அது எங்கிருக்கிறது என்பதி அனுமானித்து அதன் மேல் இருகைகளை வைத்து மூடவேண்டும். சரியாக கணித்தால் பின்பு அடுத்தவர் முறை.


பச்சகுதிர விளையாட்டு :-
முதல்ல ஒருத்தர் தரையிலே கால் நீட்டி உட்காந்து அவரை எல்லோரும் தாண்டனும்.. அப்புறம், ஒரு கையை வப்பார், அதையும் தாண்டீட்டா ரெண்டு கையையும் வப்பார், அப்புறம் எழுத்து குனிஞ்சு நிக்கையிலே தாண்டனும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தாண்டனும்.. எப்பயாவது தாண்டையிலே இடிச்சிட்டா.. அப்புறம் இடிச்சவங்க உட்காற.. அப்படியே வெளையாட்டு தொடரும்..

மேலே சொல்லாமல் விடுபட்டுப்போன எவ்வளவோ விளையாட்டுக்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் சிறுவர்களுக்கு இவைபற்றியெல்லாம் எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கிராமங்களில் இவை இன்னும் உயிருடன் இருக்கின்றன என்று நம்புகிறேன்.

தத்தக்கா, புத்தக்கா..


வலைப்பூ நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கங்கள்...

நம்முடைய கிராமங்களில் பல விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாடுகின்றனர். நாமெல்லாம் அந்த விளையாட்டுகளை மறந்தே இருப்போம். சிலர் கேள்விபட்டே இருக்க மாட்டார்கள். அதுமாதிரியான மறந்து போன எம் கிராமத்து விளையாட்டுகளை நினைவு படுத்துவதே இந்த தொடர் பதிவின் நோக்கம். 

அந்த வரிசையில் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிற விளையாட்டு சிறுவர்களுக்கானது. அந்த விளையாட்டுக்கு பெயர் "தத்தக்கா, புத்தக்கா.."

இந்த விளையாட்டை, இருவராகவும் அல்லது குழுவாகவும் சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடுவார்கள். இருவர் என்றால் எதிர் எதிராகவும், குழுவாக இருந்தால் வட்டமாகவும் உட்கார்ந்து கொண்டு விளையாடுவார்கள்.

விளையாட்டுக்கான பாடல்:

தத்தக்கா, புத்தக்கா...!
தவளம் சோறும்...!
இச்சி மரத்திலே ...!
எறும்படிக்கிற வீராயி...!
பன்னி வந்து நீராட...!
பறையன் வந்து தப்பு கட்ட..! 
ஒ..ன் அப்பன்..அப்பன்...
பெயர் என்னா...!
முருங்கப் பூ...!
முருங்கப் பூ தின்னவரே...!
முந்திரி சார் குடித்தவரே...!
பாழும் கையைப் படக்கென்று எடு!
எடுக்கமாட்டேன்,
எடுக்காட்டி தார்...தார்... வாழைக்காய்,
புத்தூர் வாழைக்காய்,
பூப்போல எடுத்துக்கோ...!

ஆடும் முறை:

எல்லோரும் வட்டமாக அமர்ந்துக்கொண்டு கைகளைத் தரையில் குப்புறப் பதித்து வைத்து இருப்பார்கள். இவர்களில் யாரவது ஒருவர் ஒரு கையை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு கையால் விளையாட்டின் பாடலை சொல்லி ஒவ்வொரு கையிலும் வைத்து வருவார்.

பாடலில் 'ஒ..ன் அப்பன்..அப்பன்... பெயர் என்னா...!' என கேட்கும் போது யார் கையில் வைத்து கேட்கிறாரோ.. அவர் முருங்கப்பூ என்று சொல்வார். பின்னர் முருங்கப் பூ தின்னவரே...!,முந்திரி சார் குடித்தவரே...!,பாழும் கையைப் படக்கென்று எடு! என்று சொல்வார். அதற்கு அவர் எடுக்கமாட்டேன் என்று சொல்வார்.எடுக்காட்டி தார்..தார்.. வாழைக்காய் தையமுட்டு வாழைக்காய், புத்தூர் வாழைக்காய் பூப் போல எடுத்துக்கோ என்று சொல்வார். 

அப்பன் பெயரை கேட்ட பிறகு, பூப போல எடுத்துக்கோ என்று சொல்லி முடிக்கும்வரை , ஒருவருக்கு மட்டும் இரண்டு கைகளிலும் மாற,மாறி வைத்துப் பாடி கையை எடுக்க வைப்பார்.

அவர் இரண்டு கையையும் எடுத்து நெற்றியில் ஒரு கையும், முதலில் ஒரு கையுமாக வைத்துக் கொள்வார். பின்னர் பாடலை முதலிலிருந்து பாடலைச் சொல்லி சுற்றி வருவார். எல்லோரையும் கையை எடுக்க வைத்த பிறகு ஒவ்வொருவரிடமும் நெற்றியில் இருப்பது என்னா? என்று கேட்பார். அவர் எடுக்க முடியாது என்பார். பின்னர் கேட்பவர் கையைப் பிடுங்கி விடுவார்.

இதுபோல முதுபுறம் இருக்கிறது என்னா? என்று கேட்பார். இதை அவர் இரும்பு என்று சொல்வார். எங்க கையை எடு என்பார்.பின்னர் கேட்பவர்பிடுங்கி விடுவார். இவ்வாறு எல்லாரிடமும் கேட்பார். கேட்டு பிடுங்கி விடுவார். இவ்வாறு தொடர்ந்து விளையாடுவார்கள்.

டிஸ்கி: இந்த விளையாட்டைப் பற்றி சுருக்கமாக விளக்கலாம் என்றால் முடியவில்லை. சற்று பெரிய பதிவாக மாறிவிட்டது. ஒரு கேள்விப்பட்ட விளையாட்டை பதிவாக தருவது முதல் முறை, முதல் முயற்சி. உங்கள் ஆதரவு தொடர்ந்தால் இன்னும் பல சுவாரஸ்யமான விளையாட்டுகள் பற்றி இந்தப் பகுதியில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலே சொன்ன பாடல் என்னுடைய அலைபேசியில் ரெகார்ட் செய்தேன் ஆனால் அது கிளியராக பதிய வில்லை எனவே அந்த பாடலின் ஆடியோ சேர்க்க முடியவில்லை.
தமிழக பாரம்பரிய விளையாட்டுக்கள் அடியோடு ஒழிந்துவிட்டன. எல்லாக் குழந்தைகளும் தொலைக்காட்சிக்கும், வீடியோ கேமுக்கும், கிரிக்கெட்டுக்கும் மாறிவிட்டனர். பல குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பும் கிடையாது. அடுக்கு மாடியில் பூட்டப்பட்ட அறையினுள் துணைக்குகூட இன்னொரு குழந்தைகூட இல்லாமல் (நாம் இருவர் நமக்கு ஒருவர் கலாச்சாரம்) தனியாக விளையாடும் பரிதாபம். கிராமத்தின் கலாச்சாரம், பாரம்பரியத்தை மீட்டெடுப்பது மிகவும் கஷ்டமான விசயம் என்றாலும் சிலவற்றையாவது பாதுகாப்போம்.

தட்டாங்கல்



காயா? பழமா?














கண்ணாமூச்சி





ஒரு குடம் தண்ணியெடுத்து...

பாண்டி ஆட்டம்
தாவி விளையாடுதல்

பல்லாங்குழி
நிறையிருந்தால் பாராட்டுங்கள்.. குறையிருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல
உங்களைத் தவிர யார் இருக்கமுடியும்? தயவுசெய்து
தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளவும்.
                                                                                                                                    கமருதீன்

                                                                     



No comments:

முக்கிய செய்திகள் – Google செய்திகள்

வெற்றியின் ரகசியம்...

வெற்றியின் ரகசியம்...... என் நேரமும் அதைப்பற்றியசிந்தனையும், அதர்க்கேற்ற உழைப்பும்,................... அன்பு கமருதீன்